ஒரு காட்சி கற்பனை பண்ணுங்க.
உங்களுடைய பெட்ரோல் கார் மூன்று வருடம் பழையது. சுமார் 30,000 கிலோமீட்டர் ஓடியிருக்கும். சமீபத்தில் மூன்றாவது சர்வீஸ் முடிந்திருக்கும். "இலவச சர்வீஸ்" என்ற பெயரில் ₹12,000 பில் கட்டிவிட்டு வெளியே வந்திருப்பீர்கள்.
அதற்குப் பிறகு மனசுக்குள் ஒரு கேள்வி வரும்.
“நான் எதுக்குடா இந்தக் காரை வாங்கினேன்?”
ஓட்டுவதில் சுவாரஸ்யம் இல்லை. மைலேஜ் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. பராமரிப்பு செலவு குறைவாக இல்லை. மொத்தத்தில் பார்த்தால் கார் இருக்கிறது, ஆனால் மகிழ்ச்சி இல்லை.
இது கற்பனை கதை இல்லை. என்னுடைய கதை.
2023-ல் ஐரோப்பாவில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு, அவசரத்திலும் கொஞ்சம் அழுத்தத்திலும் ஒரு சிறிய 7 சீட்டர் பெட்ரோல் காரை வாங்கினேன். சரியாக ஆராய்ச்சி செய்யவில்லை. வாங்கிய பிறகு மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.
சமீபத்தில் இன்சூரன்ஸ் புதுப்பிக்கும்போது திடீரென்று தோன்றியது.
“ஒரு மாற்றம் வேண்டாமா?”
நான் ஓட்டிய கார்கள்... இன்று ஓட்டும் கார்
இது என்னுடைய நான்காவது கார்.
- Wagon R – அதன் உயரமான தோற்றத்திற்காக பிடித்தது.
- Fiat Punto – அற்புதமான 1.3L டீசல் இன்ஜின்.
- XUV500 – சொல்லவே வேண்டாம், XUV500 என்றாலே ஒரு தனி கம்பீரம்.
- அதன் பிறகு... இப்போது இருக்கும் என் பெட்ரோல் கார்.
முன்னாள் கார்களை நினைத்தால் ஒரு பெருமை இருந்தது.
இந்தக் காரைப் பற்றி நினைத்தால்...
“சரி, ஓடிக்கிட்டே இருக்குது” என்ற உணர்வு மட்டுமே.
அடுத்த கார் எது?
இப்போது கார் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால், வாய்ப்புகள் ஏராளம்.
Bolero Neo, Scorpio N, Seltos போன்ற வழக்கமான தேர்வுகள் இருக்கின்றன.
ஆனால் இன்னொரு பிரிவு இருக்கிறது.
EV.
சில வருடங்களுக்கு முன்பு பார்த்தால் எதிர்காலம் போல இருந்தவை, இன்று நம் சாலைகளில் சாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
சமீபத்திய உலக அரசியல் சூழ்நிலைகளும், எரிபொருள் விலை மாற்றங்களும், மின்சாரத்தின் முக்கியத்துவத்தையும் வேறு கோணத்தில் பார்க்க வைத்திருக்கின்றன.
அப்படியென்றால்...
“இண்டக்ஷன் அடுப்புக்கு மாறியாச்சு... அடுத்தது EV தானே?”
அவ்வளவு எளிதல்ல.
EV என்பது கார் மட்டும் அல்ல, ஒரு புதிய பழக்கம்
பலர் நினைப்பது போல EV வாங்குவது என்பது வெறும் ஷோரூமுக்குப் போய் கார் வாங்குவது அல்ல.
முழு அணுகுமுறையையே மாற்ற வேண்டியிருக்கும்.
அதுதான் முதலில் எனக்கு புரிந்த விஷயம்.
A. முதலில் Range
நான் தினமும் சுமார் 40 கிலோமீட்டர் ஓட்டுகிறேன்.
அதோடு:
- அடிக்கடி சொந்த ஊர் பயணம் – 380 கி.மீ.
- வருடத்திற்கு ஒரு முறை கோவா, முருதேஷ்வர் போன்ற நீண்ட பயணங்கள்.
இப்போது ஒரு முக்கியமான விஷயம்.
பெட்ரோல் கார் வாங்கும்போது பொதுவாக முதலில் பார்பது பட்ஜெட்.
EV வாங்கும்போது முதலில் பார்க்க வேண்டியது Range.
என் பட்ஜெட்டில் MG Comet வாங்க முடியும் என்பதற்காக அதை வாங்கிவிட முடியாது.
எனது பயன்பாட்டை சமாளிக்கக்கூடிய பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் இருக்க வேண்டியது அவசியம்.
அதனால் EV தேர்வு என்பது "எவ்வளவு செலவு செய்ய முடியும்?" என்ற கேள்வியால் மட்டும் முடிவதில்லை.
"எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்?" என்பதும் அதே அளவுக்கு முக்கியம்.
B. சார்ஜிங் – உண்மையான விளையாட்டு இங்கேதான்
பெட்ரோல் அல்லது டீசல் கார் என்றால் நிம்மதி.
பயணத்தின் நடுவில் எரிபொருள் குறைந்தால் அடுத்த பங்கில் நிரப்பிவிடலாம்.
EV-யில் அந்த வசதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.
நீண்ட பயணம் என்றால் திட்டமிடல் அவசியம்.
தவறாக திட்டமிட்டால்?
வீட்டில் இருந்து வரும் விமர்சனங்களை ஆயுள் முழுவதும் கேட்க வேண்டிய நிலை!
ஏனென்றால் சில நேரங்களில் சார்ஜ் ஆக பல மணி நேரம் கூட ஆகலாம்.
Type 2 மற்றும் CCS2
EV உலகத்தில் சார்ஜிங் பற்றி பேச ஆரம்பித்தால் தனியே ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கும்.
சுருக்கமாக சொன்னால் இரண்டு விஷயங்கள் தெரிந்தால் போதும்.
Type 2
- வீடு அல்லது அலுவலக AC சார்ஜிங்
- மெதுவான சார்ஜிங்
CCS2
- DC Fast Charging
- வேகமான சார்ஜிங்
- 25 நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை
இப்போதைக்கு இவ்வளவு தெரிந்தால் போதும்.
மீதியை இன்னொரு பதிவில் பார்ப்போம்.
C. பட்ஜெட் – எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் காரணி
உங்கள் பயன்பாடு → தேவையான ரேஞ்ச் → தேவையான பேட்டரி → கார் விலை.
இதுதான் EV கணக்கு.
பெரிய பேட்டரி என்றால் பெரிய விலை.
அதற்கு காரணமும் இருக்கிறது.
ஒரு ₹10 லட்சம் பெட்ரோல் காரை எடுத்துக்கொண்டு, அதில் இருக்கும் இன்ஜினை அகற்றி மின்மோட்டர் பொருத்துகிறோம் என்று கற்பனை செய்யுங்கள்.
அதற்கு:
- பேட்டரி
- வெப்ப மேலாண்மை அமைப்பு
- பேட்டரி மேலாண்மை
- புதிய மென்பொருள்
- எடை சமநிலை மாற்றங்கள்
எல்லாம் தேவைப்படும்.
இதன் செலவு சிறியது அல்ல.
பல சந்தர்ப்பங்களில் பேட்டரி மட்டும் வாகனத்தின் மொத்த விலையின் 25% முதல் 40% வரை இருக்கும்.
அதனால்தான் EV-கள் விலை அதிகமாகத் தோன்றுகின்றன.
ஆனால் கதை அங்கே முடிவதில்லை
EV-யின் உண்மையான பலம் வாங்கும் நாளில் தெரியாது.
ஓட்ட ஆரம்பித்த பிறகுதான் தெரியும்.
ஏனென்றால் அதன் இயக்கச் செலவு மிகவும் குறைவு.
இங்குதான் கணக்கு சுவாரஸ்யமாகிறது.
பெட்ரோல் கார் vs EV – ஒரு எளிய கணக்கு
என்னுடைய தற்போதைய பெட்ரோல் கார் நகரத்தில் சராசரியாக 10 கி.மீ./லிட்டர் தருகிறது.
நெடுஞ்சாலையில் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
மொத்தமாக 12 கி.மீ./லிட்டர் என்று வைத்துக்கொள்வோம்.
நான் மாதத்திற்கு சுமார் 1,250 கி.மீ. ஓட்டுகிறேன்.
அந்தக் கணக்கில் பார்த்தால் பெட்ரோல் காரின் செலவு சுமார் ₹11 ஒரு கிலோமீட்டருக்கு வருகிறது.
ஆம்.
நாம் தினமும் செலவழிக்கும் தொகை அதுதான்.
டீசலில் கொஞ்சம் குறையலாம்.
ஆனால் மலிவாகிவிடாது.
மறுபக்கம் EV?
ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ₹1 முதல் ₹4 வரை.
இதைவிட பெரிய வித்தியாசம் வேறு என்ன வேண்டும்?
இப்போதைக்கு எனது முடிவு
இந்த ஆய்வில் இருந்து நான் புரிந்துகொண்ட சில விஷயங்கள்:
- EV வாங்குவது விலை அதிகம். ஆனால் ஓட்டுவதும் பராமரிப்பதும் மலிவு.
- பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் பல வருட அனுபவத்துடன் இருக்கின்றன. ஆனால் EV-களும் வேகமாக வளர்ந்து வருகின்றன.
- சார்ஜிங் கட்டமைப்பு இன்னும் முழுமையடையவில்லை. ஆனால் தினமும் மேம்பட்டு வருகிறது.
அதனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
EV-கள் "இனி வந்துவிடும்" தொழில்நுட்பம் அல்ல.
ஏற்கனவே வந்துவிட்ட தொழில்நுட்பம்.
நாம் இன்று வாங்க முடியுமா தெரியாது.
ஆனால் அடுத்த கார் பற்றி யோசிக்கும் பட்டியலில் EV-யை இனி புறக்கணிக்க முடியாது.
அதைப் பற்றி இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆராய வேண்டும்.
ஒருநாள் நமக்கேற்ற சரியான காரை கண்டுபிடிக்க வேண்டும்.
அந்தப் பயணத்தில் நீங்களும் என்னோடு சேர்ந்து வாருங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
EV வாங்குவதற்கு முன் முதலில் என்ன பார்க்க வேண்டும்?
உங்கள் தினசரி usage, நீண்ட பயணம், charging வசதி மற்றும் budget ஆகிய நான்கையும் முதலில் பார்க்க வேண்டும்.
வீட்டில் charging இல்லாமல் EV வாங்கலாமா?
வாங்கலாம். ஆனால் public charging-ஐ நம்ப வேண்டியிருப்பதால் உங்கள் routine-க்கு அது practical-ஆ இருக்கிறதா என்பதை முன்கூட்டியே மதிப்பிட வேண்டும்.
EV உண்மையில் பணம் சேமிக்குமா?
Usage அதிகமாகவும் home charging கிடைத்தாலும் running cost savings தெளிவாக இருக்கும். ஆனால் purchase price, EMI மற்றும் insurance-யும் சேர்த்து பார்க்க வேண்டும்.